Thursday, 12 March 2015

இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? - ரோமர் 8:31

நமக்கு விரோதமாக நிற்பவன் யார்? என்று அப்போஸ்தலராகிய பவுல் கேட்கிறார்.   ஆம் தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கும் போது யாரும் உங்களுக்கு விரோதமாய் நிற்ற முடியாது.  தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கும் போது உங்களை அவருடைய கரத்திலிருந்து யாரும் பரித்துக்கொள்ள முடியாது.  உங்களை தொடுகிறவன் அவருடைய கண்மணியை தொடுகிறான்.   ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.(ஏசா 49:15-16).   உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.(சக 2:8).  எனவே முதலாவது உங்கள் பட்சத்தில் தேவன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.   தாவீதின் பட்சத்தில் கர்த்தர் இருந்தார்.  கர்த்தர் எப்போதும் தன் பட்சத்தில் இருப்பதை தாவீது உணர்ந்தான்.   கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்? எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். (சங் 118:6-7).   உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அப்பொழுது அவர் உங்கள் பட்சத்தில் இருப்பார்.  நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள், தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.(சங் 56:9).  தாவீது எப்பொழுதெல்லாம் கர்த்தரை நோக்கி கூப்பிட்டானோ அப்பொழுதெல்லாம் தேவன் அவனை விடுவித்தார்.  துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன், அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.(சங் 18:3).  அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.(சங் 91:15).  இப்பொழுதே கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள், தேவன் உங்களுக்கு செவிகொடுப்பார், உங்களுக்கு துணை செய்வார்.  உலகத்தார் உன்னை என்ன செய்து விடுகிறேன் பார்? என்று சவால் விடலாம், கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறபடியினால் பயப்படாதிருங்கள்.  நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.(சங் 23:4).  சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.(சங் 46:11). 

பிரியமானவர்களே! தேவன் உங்கள் பட்சத்தில் இருக்க எப்போதும் ஆயத்தமாய் இருக்கிறார்.  ஆனால் நீங்கள் அவருடைய பட்சத்தில் நிற்பதில்லை.   பல நேரங்களில் தேவன் உங்களோடு இருக்கிறதை நீங்கள் உணராமல் தேவனைவிட்டு தூர போய்விடுகிறீர்கள்.   எனவே அப்படிப்பட்ட நேரங்களில் சிறு சிறு காரியங்களுக்கு கூட பயப்படுகிறீர்கள்.   நீங்கள் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து நடக்கும் போது தேவன் உங்களோடு கூட இருப்பார், நீங்கள் அவரில் நிலைத்து நிற்பீர்கள்.  நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.(யோ 15:10).  நீங்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்படியும் போது உங்கள் ஜெபங்களுக்கு பதிலை பெற்றுக்கொள்கிறீர்கள்.  உங்கள் தேவைகள் அனைத்தையும் தேவன் சந்தக்கிறார்.  நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.(யோ 15:7).  நீங்கள் அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும் போது எதுவும் உங்களை தேவனிடத்திலிருந்து பிரிக்க முடியாது.  கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?  இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும்  ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.   மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,  உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.(ரோ 8:36-39).  தேவ பிள்ளைகளே, இன்றைக்கு உங்களுக்கு முன்பாக பல சவால்கள் காணப்படலாம், இவைகள் உங்களுக்கு முன்பாக அல்ல உங்களோடு இருக்கும் தேவனுக்கு முன்பாக காணப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  இதை மேற்கொள்ள எப்பொழுதும் தேவன் உங்களோடு இருக்க வேண்டும்.   அவருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, அவரை நோக்கி கூப்பிடுங்கள்.  தேவன் நிச்சயமாய் உங்களோடு இருந்த உங்களுக்காக யுத்தம் செய்வார்.  இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல, எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.(ஏசா 54:15).

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம், உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய், இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். – ஏசாயா 54:17

No comments:

Post a Comment