Sunday, 1 March 2015

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். - மாற்கு 11:24

உங்களுடைய ஜெபத்தில் விசுவாசம் காணப்படவேண்டும்.  விசுவாசமும், ஜெபமும் சேர்ந்தால் தான் தேவன் உங்கள் வாழ்க்கையில் வல்லமையான காரியங்களை தேவனிடத்தில் எதிர்பார்க்க முடியும்.  நீங்கள் ஜெபிக்கும் போது உங்கள் உள்ளம் தேவனை முழுமையாக விசுவாசிக்க வேண்டும், தேவன் உங்கள் ஜெபத்தை கேட்டுபதில் கொடுப்பார் என்று முழுமனதோடு விசுவாசியுங்கள்.  பல வேலைகளிலே நீங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்கிறீர்கள், ஆனால் உங்களுடைய நெருக்கங்கள் மிகவும் அதிகரிக்கும் போது உங்களுக்குள் அவிசுவாசம் வருகிறது. அப்படிப்பட்ட வேலையில் உங்கள் நெருக்கத்திற்கு முடிவுகான மனித உதவிகளையும், உங்கள் செந்த முயற்சிகளையும் எடுக்கிறீர்கள்.  இதில் உங்கள் நெருக்கத்திற்கு தற்கால முடிவு கிடைத்தாலும் அது முற்றிலும் ஓய்ந்துவிடவில்லை.  மீண்டும் அதே பிரச்சனைகளையும் நெருக்கத்தையும் சந்திக்கிறீர்கள்.  பிரியமானவர்களே! தேவனிடத்தில் நீங்கள் விசுவாசமாய் ஜெபிப்பது என்பது உங்கள் பாரங்கள் முழுவதையும் கர்த்தரிடத்தில் வைப்பதாகும்.  கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.(சங் 55:22).  உங்கள் பிரச்சனைளை கர்த்தருடைய பொறுப்பில் விட்டுவிட்டு அதற்கு முடிவுவரும் வரை தேவன் பார்த்துக்கொள்வார் என்று அவரையே சார்ந்து கொள்ளுங்கள்.  ஆனால் நீங்கள் உங்கள் பிரச்சனைகளை கர்த்தருடைய பொருப்பில் கொடுக்கிறீர்கள், பின்பு மீண்டும், மீண்டும் அதையே சிந்தித்துக்கொண்டு அதை தோண்டி எடுத்து, பிரச்சனை தீரவில்லையே, தேவன் எனக்கு பதில் கொடுக்கவில்லையே என்று சொல்லுகிறீர்கள்.  பிரியமானவர்களே! உங்கள் சூழ்நிலைகளை அவரிடத்தில் சொல்லி, அவருடைய பொறுப்பில் கொடுத்துவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார்.  ஆம் கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது, உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.(சங் 138:8).  அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.  அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.(லூக்கா 17:6).

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.(எபி 11:1).  இன்றைக்கு தேவன் உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண விரும்புகிறார்.  ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தகப்பன் என்று அழைக்கிறோம். ஆபிரகாமின் விசுவாசத்தை பாருங்கள்.  அவருக்கு தேவன் முதிர்வயதில் குழந்தையை கொடுப்பேன் என்று வாக்குத்தம் செய்தார்.  ஆனால் அவருக்கு முதிற்வயதில் குழந்தை பிறக்கும் என்பதற்கு எந்த எதுகரமும் இல்லை. உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.  அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை, அவன் ஏறக்குறைய  நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.(ரோமர் 4:18-19).   ஆபிரகாமின் மனைவி சாராளும் வயதுசென்றவளாய் இருந்தாள்.  விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.   ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.(எபி 11:11-12).  ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. இயற்கையின் எல்லா சூழ்நிலைகளும், மருத்துவரீதியிலான கொள்கைகளும் அவர்களுக்கு எதிராகவே இருந்தது.  ஆபிரகாம் சூழ்நிலைகளை விசுவாசியாமல் தேவனுடைய வார்த்தையையே விசுவாசித்தான்.  நீங்களும் சூழ்நிலைகளை விசுவாசியாமல் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் போது உங்களுடைய விசுவாசம் விருத்தியடையும்.  தேவனுடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கும் போது உங்களால் கூடாதகாரியம் எதுவும் ஒன்றுமிராது.  அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான், கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம், உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(மத் 17:20).


இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். - மாற்கு 9:23

No comments:

Post a Comment