Thursday, 2 January 2014




உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். - 1யோவான் 2:17


இந்த உலகத்தில் நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் நாம் கர்த்தரில் நிலைத்திருக்க வேண்டும். அநேகர் பாதியில் பின்மாற்றம் அடைகிறார்கள். பின்பு தேவனால் உணர்த்தப்பட்டு மீண்டும் தேவனில் நிலைத்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய வாழ்க்கையில் குந்தி குந்தி நடக்கிற ஒரு அனுபவமே காணப்படுகிறது. ஒரே சீராக தேவனில் நிலைத்திருப்பதில்லை. தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது, முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.(மத் 10:22). முடிவு பரியந்தம் நீங்கள் தேவனில் நிலைத்திருக்க அவர் தருகிற ஆலோசனை, நீங்கள் அவருடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும். தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும் என்ற சொல்லும் போது, அநேகர் ஆவிக்குரிய காரியங்களையும், ஊழி சம்பந்தமான காரியங்களை மாத்திரம் நினைக்கிறார்கள். தேவனுடைய சித்தம் என்றால் உங்கள் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவருடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும். உங்களுடைய குடும்பத்தின் காரியமானாலும், திருமண காரியங்களானாலும், வேலை மற்றும் தொழில் சம்பதமான காரியங்களானாலும், அனுதின வாழ்க்கைக்குரிய காரியங்களானாலும். எதை செய்தாலும் நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும். அப்பொழுது நீங்கள் முடிவுபரியந்தம் தேவனில் நிலைத்திருக்க முடியும். நீங்கள் தேவனுடைய சித்தத்தை செய்யமுடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தேவனுடைய சித்தம் என்ன என்பதை அறியாமல் இருப்பது. மாம்சத்தின்படி சிந்தித்து நடப்பது. உங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்ற துடிப்பது. மற்றவர்கள் செல்லும் வழிகளில் செல்ல நினைப்பது. இவைகள் அனைத்தும் நீங்கள் தேவனுடைய சித்தத்தை செய்ய முடியாமல் தடுக்கிறது. தேவனுடைய சி;த்தத்தை செய்து முடிவுபரியந்தம் நிலைத்திருக்கு முதலாவது உங்களை ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிப+ரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.(ரோமர் 12:1-2). ஜீவ பலியாக உங்களை ஒப்புக்கொடுத்தல் என்பது, உங்கள் வாழ்க்கையை முழுமையாக தேவன் நடத்த உங்களை ஒப்புக்கொடுப்பதாகும். நீங்கள் எதை செய்தாலும் தேவனுடைய அனுமதியை பெற்று செய்ய ஒப்புக்கொடுப்பதாகும். சுய சித்தத்திற்கும், சுய விருப்பத்திற்கும் சிறிதும் இடம் கொடுக்க கூடாது. இதையே தேவன் உங்களிடத்தில் எதிற்பார்கிறார்;. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே, ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.(1கொரி 6:20).

முடிவுபரியந்தம் நிலைத்திருக்க நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள முடியாதபடி சத்துரு பல தடைகளயும், போராட்டங்களையும் கொண்டுவரலாம். ஆனால் நீங்கள் பொறுமையோடு தேவசமுகத்தில் காத்திருந்து அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள வேண்டும். எலியா ஒரு மாபெரும் தீர்க்கதரிசி. அவருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தையும் தேவனுடைய சித்தத்தின்படி செய்து வந்தார். தேவனுடைய கட்டளையின்படி தேசத்தில் மழை பெய்யாதிருக்கும் என்று சொன்னார். தேவனுடைய வார்த்தையின் படி கேரீத் ஆற்றங்கரையில் தங்கினார், காகம் மூலம் எலியா போஷிக்கப்பட்டார். தேவனுடைய சித்தத்தின்படி சாரிபாத் ஊரில் விதவையின் வீட்டில் தங்கினார். தேவனுடைய கட்டளையின் படி தன்னை திரும்ப ஆகாப் ராஜாவினிடத்திற்கு சென்றார். தேவனுடைய சித்தத்தின்படி கர்த்தரே தேவன் என்பதை நிறுபித்து காட்டி, பாகாலின் தீர்க்கதரிசிகளை தப்பவிடாதபடி வெட்டிப்போட்டார். எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும் ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.(1இரா 19:1-2). ஆனால் இதே எலியா தீர்க்கதரிசி, யேசபேலின் வார்த்தையை கேட்டு தேவனுடைய சித்தத்தை அறியாது தன் ஆத்துமவை எடுத்துக்கொள்ளும் என்று விண்ணப்பம் செய்தார். அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும், நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான், அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.(1இரா 19:4-5). அப்பொழுது தேவன் எலியா பயணம் செய்யவேண்டிய தூரம் வெகு தூரம் என்பதை உணர்த்தி தம்முடைய சித்தத்தை அறிந்து கொள்ள தேவ பர்வதத்தில் வந்து நிற்கச்சொன்னார். எலியா தேவனுடைய வார்த்தையின்படி தேவ சமுகத்தில் காத்திருந்தார், தேவ சித்தத்தை பெற்றுக்கொண்டார். அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.(1இரா 19:15-16). தேவ சமுகத்தில் நீங்களும் பொறுமையாய் காத்திருந்து அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ளுங்கள்.


தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். - லூக்கா 12:47

No comments:

Post a Comment