அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். - செப்பனியா 3:16
தேவன் தம்மை விசுவாசிக்கிற ஜனத்தை சீயோனே என்று அழைக்கிறார். வேதத்தில் அப்படியே தேவன் தம்முடைய ஜனங்களை சீயோன் குமாரத்தியே என்று அன்போடு அழைப்பதை பார்கிறோhம். தூசியை உதறிவிட்டு எழுந்திரு, எருசலேமே, வீற்றிரு, சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.(ஏசா 52:2). அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,(யோ 12:14) சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி,(மீகா 4:13). சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு, இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(சகரியா 2:10). இன்றைக்கு தேவன் உங்களை சீயோனே என்று அன்போடு அழைத்து உன் கைகளைத் தளரவிடாதே என்று சொல்லுகிறார். கைகளை தளரவிடுதல் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும் சோர்வை வெளிப்படுத்துகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் வானந்திரத்தின் வழியாய் பிரயாணம் செய்த போது அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு, நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். மோசே தன் கையை ஏறெடுத்;திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள், அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள், அதின்மேல் உட்கார்ந்தான், ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள், இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.(யாத் 17:11-12). இங்கு மோசேயின் கைகள் தளர்ந்த போது அமலேக்கியர்கள் மேற்கொண்டார்கள். இதை அறிந்த ஆரோனும், ஊரும் அவன் கைகள் தளர்ந்து போகாதபடி தாங்கினார்கள். இதைபோல உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதெல்லாம் உங்கள் கண்களை தேவனுக்கு நேராக நோக்காதபடி சோர்ந்து போகிறீர்களோ, அப்பொழுது சாத்தான் உங்களை எளிதில் ஜெயிக்கிறான். ஆவிக்குரிய முதிர்ச்சியிலும், தேவனுடைய வசனத்தின் முழுமையிலும் நீங்கள் வளர்ந்து வருகிற வேளையில் உங்களை சோர்வடைச் செய்யும் சம்பவங்கள் அநேகம் உங்கள் வாழ்க்கையில் நிகழலாம். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.(எபி 10:35).
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?(நீதி 6:9-10). இந்த வசனத்தில் கைமுடக்குதல் என்ற வார்த்தை கைகள் தளர்ந்து போனதை காட்டுகிறது. அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் சோம்பல் உங்களுடைய கரங்களை பெலன் இழக்கச்செய்கிறது. தேவ சமுகத்தில் ஜெபிக்கவேண்டும் என்று ஜெபிக்க தொடங்கும் போது போம்பலினால் ஜெப நேரத்தை குறைக்கிறீர்கள். அல்லது நாளை முதல் ஒழுங்காக ஜெபித்துக்கொள்ளலாம் என்று சொல்லி நாளை, நாளை என்று சொல்லி உங்கள் கைகளை தளரவிடுகிறீர்கள். அதை போலவே வேதம் வாசிக்கும் போதும், ஆலயத்துக்கு செல்லும் காலங்களிலும், சாட்சி சொல்லும் நேரங்களிலும் உங்கள் கைகளை தளரவிடுகிறீர்கள். இப்படி நீங்கள் உங்கள் கைகளை தளரவிடும் பொது உங்கள் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் குறைவு ஏற்படுகிறது. எனவே தேவன் உங்கள் கைகளைத் தளரவிடாதிருங்கள் என்று சொல்லுகிறார். அமலேக்கியர்கள் இஸ்ரவேலரோடு யுத்தம் செய்த போதும் எப்படி ஊரும், ஆரோனும் மோசேயின் கைகளை பெலப்படுத்தினார்களோ. அது போல உங்கள் கைகளை பெலப்படுத்தும்படி பரிசுத்தமும், ஜெபமும் (தேவனோடு நீங்கள் கொள்ளும் ஐக்கியம்) மிகவும் அவசியம். அவைகள் ஒருபோதும் உங்கள் கைகளை தளரவிட செய்யாது. இன்றைக்கு உங்கள் பரிசுத்த ஜீவியம் எப்படி இருக்கிறது? தேவனோடு உங்கள் ஐக்கியம் எவ்வாறு உள்ளது? உங்கள் வாழ்க்கையில் உங்கள் கைகள் தளந்து போனதிற்கான காரணத்தையும், அதன் நிமித்தம் சத்துரு உங்களை மேற்கொண்டதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுதே உங்கள் பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்புங்கள். சாட்சியுள்ள பரிசுத்த ஜீவியம் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது உங்கள் கைகளை தேவன் பெலப்படுத்துவார். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலேஅல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.(1கொரி 4:20). தேவ பெலத்தினால் உங்கள் பிரச்சனைகளை முறியடிப்பீர்கள். இந்நாள் வரை உங்களுக்கு வரோதமாய் போராடின சத்துருவை ஜெபிப்பீர்கள். உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார், ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள், ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.(உபா 28:7). உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் ப+மியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார்.(உபா 11:25).
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. – 1பேதுரு 1:5
No comments:
Post a Comment