Monday, 5 January 2015





இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.  இந்த வருட வாக்குத்தத்தத்தின் செய்தியின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நம்முடைய தேவன் நல்லவர், நன்மைகளை செய்கிற தேவன்.  உங்களுக்கும் இந்த வருடத்தில் நன்மையானவைகளை செய்வார், நன்மையினால் உன் வாயை திருப்த்தியாக்குவார்.  என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எரேமியா 31:14)  கடந்த வருடங்களில் எத்தனையோ தீர்மானங்களை நீ எடுத்து, நான் அதை செய்வேன், செய்து முடிப்பேன் என்று உன் சொந்த பெலத்தை நம்பி சொல்லி கடைசியில் அவைகளை செய்யமுடியாமல் தோல்வியில் முடித்தாய்.  இந்த வருடத்தில் தேவனுடைய ஆலோசனையின் படி நீ செய்யும் எல்லாவற்றையும் தேவன் வாய்க்கச்செய்வார்.  என் ஆலோசனை நிலைநிற்கும் (ஏசா 46:10)  கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன், நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும். (எரே 30:18) உனக்கு இரக்கஞ்செய்வேன், கட்டுவேன் என்று தேவன் சொல்லுகிறார்.  தேவன் உன்னிடத்தில் இரக்கமுள்ளரவாய் இருக்கிறார்.  உன்னுடைய பழைய வாழ்க்கையை குறித்தும், நீ செய்த தவறை குறித்தும் கலங்காதே, உன்னுடைய மனசாட்சி உன்னை குற்றப்படுத்த இடம் கொடாதே, அதற்கு பதிலாக இரக்கமுள்ள உண்மையுள்ள இயேசுவையே நோக்கிப்பார், அவர் உனக்கு சொல்லும் வார்த்தையை உறுதியாக பிடித்துக்கொள். அதின் படி மாத்திரம் செய்.  உன் வாழ்க்கையில் நெருக்கப்படும் போது, நீ மற்றவர்களால் அவமானப்படுத்தபடும்போது, நிந்தக்கப்படும்போது நீ கலங்காதே.   உன் மேல் இரக்கமாய் இருக்கிற அவரை நோக்கிப்பார்.  அவரிடத்திலிருந்து உனக்கு இரக்கம் வரும்.  அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர், இரக்கமுள்ள பிரதான ஆசாரியர்.  அவருடைய இரக்கத்திற்கு முடிவில்லை.  தேவன் உனக்கு இரக்கஞ்செய்பவர்மட்டுமல்ல உன்னை கட்டப்போகிறார்.  அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.(எரே 26:4)  நீங்கள் இந்தத் தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன், உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன், நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன். (எரே 42:10)


இந்த வருஷத்தில் தேவன் வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்து வாக்குத்தத்தமாக கொடுக்கிறார்.  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் ப+ட்டமாட்டான். (வெளி 3:8) திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  தேவன் இந்த வார்த்தையை மிகவும் உறுதியாக சொல்லுகிறார்.  அவர் உன்க்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறது மாத்திரமல்ல அதை  ஒருவனும் ப+ட்டமாட்டான், அதை ஒருவனும் பூட்ட முடியாது என்று சொல்லி தம்முடைய அதிகாரத்தினால் முத்திரை போடுகிறார்.

இதுவரை நீங்கள் எத்தனையோ முயற்சிகளை செய்து தடையாய் காணப்படுகிறது, என்னால் முடியவில்லை என்று சொல்லி எவைகளை எல்லாம் சொன்னீர்களோ அவைகள் எல்லாம் இந்த வருடத்தில் வாய்கக்கும்.  தேவன் உங்களுக்கு இப்பொழுது திறந்த வாசலை வைத்துள்ளார்.  தேவன் உனக்கு முன்பாக திறந்த வாசலை வைத்துள்ளார் என்றால், அவர் உனக்கு முன்பாக சென்று இது வரை அடைக்கப்பட்டு உன்னால் கடக்க முடியாதவைகளை மாற்றுகிறார்.  ஆம் அவர் உனக்கு முன்பாக செல்கிறார் கோனலானவைகளை செவ்வையாக்குகிறார்.  நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன். (ஏசா 45:2-4)

அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,  மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். (சங் 78:23-24). தேவன் உனக்காக வானத்தின் கதவுகளை திறக்கிறார். வானத்திலிருந்து  மன்னாவை தருகிறார்.  மன்னா உங்களுக்காக தேவனிடத்திலிருந்து வரும் வார்த்தைகள், வாக்குத்தத்தங்கள், உங்கள் ஜெபத்திற்கான பதில்கள்.  ஆம் நீங்கள் கூப்பிடும் போது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரிடத்திலிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும்.  நீங்கள் கூப்பிடும் போது உங்களுக்கு மறுஉத்தரவு கொடுப்பார்.  தேவன் உனக்கு வானத்துப்பனியையும் ப+மியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. (ஆதி 27:8) உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார், சர்வ வல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். (ஆதி 49:25)  இன்றைக்கு எல்லோரும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களையே நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் தேவன் உங்களுக்காக அதைவிட மேலான ஆசீர்வாதங்களையே வைத்திருக்கிறார். ப+மியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.(கொலோ 3:2) வானத்திலிருந்து உனக்கு நன்மையான ஈவுகளை கொடுப்பார்.  நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.(யாக் 1:17) பலநேரங்களில் எனக்கு மட்டும் ஏன் நன்மையாக ஒரு காரியமும் நடப்பதில்லை, நான் நன்மை என்று நினைப்பதெல்லாம் தீமையாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.  இந்த வருடத்தில் தேவன் உங்களுக்கு நன்மையானதையே செய்வார், உங்களுக்கு யார் தீமை செய்ய நினைத்தாலும் அவைகளை நன்மையாக மாற்றுவார்.  அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்
தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோ 8:28). 


என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள், அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பூமியின் கனியைப் பட்சித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன், அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(மல்கியா 3:10-11)  தேவன் உங்களுக்காக வானத்தின் பலகணிகளைத் திறக்கிறார்.  நீங்கள் எத்தனைபேர் தசமபாகங்களில் செலுத்துவதில் உண்மையாக இருக்கிறீர்கள்.  இது மனிதனுக்காவோ, ஊழியர்களுக்காகவோ கொடுக்கிறோம் என்று கொடுக்காமல் தேவனுக்காக கொடுக்கிறீர்கள் என்பதை அறிந்து கொடுங்கள்.  சிலர் இவைகள் இன்றைக்கு தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.  மத்தேயு 23:23ல் இயேசு வேதபாரகர்கள், பரிசேயர்கள் தசமபாகங்களை மட்டும் சரியாக செலுத்தி தேவனுடைய இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள் என்று சொல்லி.  தசமபாகங்களையும் செலுத்தவேண்டும், இரக்கத்தையும் செய்யவேண்டும், விசுவாசத்தையும் விட்டுவிடக்கூடாது என்று சொல்லுகிறார்.  தேவன் உங்களுக்காக வானத்தின் பலகணிகளைத் திறக்கும்போது உங்கள் ஆசீர்வாதங்கள் மிகுதியாக இருக்கும், இனி நஷ்டங்கள், வீண் செலவுகள், அழிவுகள் உங்கள் வாழ்கையில் இருக்காது.


ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது, விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். (1கொரி 12:9)  தேவன் உங்களுக்காக பெரிதும் அநுகூலமுமான கதவை திறக்கிறார்.  பெரிதும் அநுகூலமுமான கதவுவை உங்களுக்கு விரோதஞ்செய்கிறவர்களுக்கும், உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக திறக்கிறார்.  கடந்த ஆண்டுகளில் பலமுறை உங்களை பகைக்கிறவர்கள், உங்களை விரோதமாய் நினைக்கிறவர்கள் முன்பாக வெட்க்கப்பட்டு போனோம் என்று நீங்கள் கலங்கினதுண்டு.  இனி நீங்கள் வெட்கப்பட்டு போவதில்லை. உங்களுக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு முன்பாக  பெரிதும் அநுகூலமுமான கதவை தேவன் திறந்திருக்கிறபடியினால் நீங்கள் அவர்களுக்கு முன்பாக நிமிர்ந்து நிற்ப்பீர்கள்.  உங்களுக்கு விரோதமாய் யார் எது செய்தாலும் அவைகள் உங்களை அணுகுவதில்லை.  அவர்களுக்கு மாத்திரம் ஜெபியுங்கள்.  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.(மத் 5:44)


தேவனுடைய வாக்குத்தத்தை விசுவாசித்து அவைகளை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள் ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதை காண்பிர்கள்.  இந்த வருடத்தில் எல்லா நாட்களும் உங்களுக்கான திறந்த வாசலை காண்பீர்கள்.  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். 
 

No comments:

Post a Comment