நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன் - எரேமியா 2:21.
தேவன் உங்களை காணும்போது நற்கனி தரும் உயர்குலத் திராட்சைசெடியாக பார்க்கிறார். எனவே தேவன் உங்களிடத்தில் அதற்கேற்ப மேன்மையான, நல்ல, ருசியுள்ள கனிகளையும் எதிர்பார்கிறார். நற்கனி தரும் திராட்சைசெடியாக எங்கே நாட்டியிருக்கிறார் தெரியுமா? தேவன் உங்களை தம்முடைய தோட்டத்திலே நாட்டியிருக்கிறார். இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன், என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. (ஏசா 5:1). தேவன் உங்களை தம்முடைய தோட்டத்தில் நாட்டியிருக்கிறபடியினால் அதற்கு மிகுந்த பாதுகாப்பை கொடுத்திருக்கிறார். உங்களை சத்துருக்கள் தொடாத படி உங்களை சுற்றிலும் ஒரு வேலி இருக்கிறது, உங்களுக்கு ஒருவரும் தீங்கு செய்ய முடியாது. கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.(ஏசா 27:3). யோபுவின் வாழ்க்கையில் அவனை சுற்றிலும் தேவன் அடைத்த வேலி இருந்தது. அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான் ? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர். அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.(யோபு 1:9-10) நற்கனி தரும் உயர்குலத் திராட்சைசெடியான உங்களிடத்தில் தேவன் கனிகளை எதிர்பார்த்து வந்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களிடத்திலும் தேவன் நல்ல கனிகளை எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் கசப்பான கனிகளை கொடுத்தனர். அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. எருசலேமின் குடிகளே, ய+தாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள். (ஏசா 5:2-3). நீங்கள் எப்படிப்பட்ட கனிகளை தேவனுக்கு கொடுக்க இருக்கிறீர்கள். நீங்கள் நல்ல கனிகளை கொடுப்பீர்களானால் நீங்கள் மிகுந்த கனிகளை கொடுக்கும்படி தேவன் உங்களுக்கு உதவி செய்கிறார். என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். (யோ 15:2).
கனி கொடுத்தல் என்பது தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்தமாகவும், சாட்சியுமாகவும் வாழும் வாழ்க்கையாகும். நீங்கள் தேவ சித்தத்தை செய்யவும், பரிசுத்தமாய் வாழ்வும், சாட்சியுள்ள ஜீவியம் செய்யவும் விரும்புகிறீர்கள். ஆனால் பல நேரங்களில் அது தோல்வியில் முடிந்து விடுகிறது. நீங்கள் கனி கொடுக்கவேண்டுமானால் செய்ய வேண்டிய முக்கியமான காரியம், தேவனில் நிலைத்திருக்க வேண்டும். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். (யோ 15:4). தேவனில் நிலைத்திருக்காத ஒருவன் சாட்சியும், பரிசுத்தமான வாழ்கையையும், தேவனுடைய சித்தத்தை செய்யமுடியாது. தேவன் நிலைத்திராத ஒருவன் காத்தருடைய சித்தத்தை அறிந்து கொள்ள முடியாது. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோ 15:5). இயேசு கிறிஸ்து பிதாவில் நிலைத்திருந்த படியினால் பிதாவின் சித்தத்தை அறிந்து, அவருடைய சித்தத்தின்படி சிலுவையில் மறித்தார். அவர் பிதாவில் நிலைத்திருந்து, பிதாவாகிய தேவன் எதிர்பார்த்த கனிகளை கொடுத்து சாட்சியுள்ள வாழ்க்கையை இந்த பூமியில் வாழ்ந்தார். இயேசு பிதாவினுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து அதின்படி செய்வதன் மூலமே பிதாவில் நிலைத்திருந்தார். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.(யோ 15:10). நீங்களும் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்கும் போது தேவனில் நிலைத்திருக்க முடியும். இன்றைக்கு உங்களை அராய்ந்து பாருங்கள், நீங்கள் தேவனுடைய வார்தைகளுக்கு செவிகொடுத்து அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்பொழுதே அவருக்கு செவிகொடுங்கள், அவரில் நிலைத்திருப்பீர்கள் மிகுந்த கனிகளை கொடுப்பீர்கள், பரிசுத்தமான ஜீவியம் செய்வீர்கள் சாட்சியாக வாழ்வீர்கள்.
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். – யோவான் 15:16.
No comments:
Post a Comment