Monday, 2 December 2013



விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் - 1 பேதுரு 5:9.

தேவன் உங்களை பார்த்து பிசாசுக்கு பயப்படாமல் அவனுக்கு நீங்கள் எதிர்த்து நில்லுங்கள் என்று சொல்லுகிறார். தேவன் எப்படி அவனுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார். ஆம் நீங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகள் பிசாசுக்கு மிகவும் பயப்படுகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் எது நேர்ந்தாலும் யாரோ தங்களுக்கு எதிராக செய்வினை செய்து விட்டார்கள் என்று பயப்படுகிறார்கள். உடனே தீர்க்கதரிசிகளிடத்தில் ஓடுகிறார்கள். பலர் தீர்க்கதரிகள் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொண்டு குறிசொல்லுவதை போல எதையாவது சொல்லுகிறார்கள். அவர்கள் உண்மையாகவே தேவனால் தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. இதை நம்பி பலர் மோசம் போகிறார்கள். வேதத்தில் தீர்க்கதரிசிகளுக்கு சொல்லப்பட்ட அனைத்து சுபாவங்களும் அவர்களுக்கு உள்ளதா என்று ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கடந்த காலங்களை அப்படியே சொல்லுகிறார்கள் என்பதற்காக அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று சொல்லாதீர்கள். பிரியமானவர்களே! நீங்கள் எப்பொழுதும் சாத்தானுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் என்பதையே தேவன் விரும்புகிறார். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.(எபே 6:11). நீங்கள் எதிர்பாராத நேரங்களில் உங்கள் வாழ்கையில் சாத்தான் பல பிரச்சனைகளை கொண்டு வரலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் விசுவாசத்தோடு தைரியமாய் அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். சாத்தான் கொண்டு வருகிற பிரச்சனைகள் உங்கள் பார்வைக்கு ஒரு மலையை போல் மிகவும் பெரிதாய் இருக்கலாம். அது அவனுடைய பார்வையிலும் பெரிதாக தெரியலாம். ஆனாலும் நீங்கள் பயப்படாதிருங்கள். பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள், ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1யோ 4:4) அவைகள் தேவனுடைய பார்வையில் மிகவும் சிறியவைகள். தேவனுடைய பெலத்தினால் நீங்கள் அவனுக்கு எதிர்த்து நின்று அவனை ஜெயிக்கப்போகிறீர்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசி நீ தேவனுடைய மகிமையை காண்பாய். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற் 11:23). தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1யோ 5:4)


ஒருவேளை சத்துரு உங்கள்; குடும்பத்திலோ, படிக்கும் இடத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ, வியாபாரத்திலோ, குடும்ப வாழ்க்கையிலோ உங்களுக்கு விரோதமாய் செய்யும் கிரியைகள் பயங்கரமாய் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எரே 1:19). இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசித்து எதிர்த்து நிற்கும் போது உங்கள் பிரச்சனைகளுக்கு தேவன் கொடுக்கும் முடிவை காண்பீர்கள். உங்களுக்கு பயந்து சாத்தான் ஒடிப்போவதை உன் கண்கள் காணும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை, நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (யோசு 1:5). தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அதன் படி நடப்பதே அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதாகும். உங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடமுடியாது என்பது போல உங்கள் சூழ்நிலைகள் காணப்படுகிறது. நீங்கள் பல நேரங்களில் அவருக்கு கீழ்படியாதபடியினால் உங்கள் விசுவாசம் கிரியை செய்யவில்லை. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து உங்கள் விசுவாசத்தை கிரியையினால் வெளிப்படுத்துங்கள். உங்கள் பிரச்சனைகளை காட்டிலும் உங்களிடத்தில் காணப்படுகிற விசுவாசம் பெரியது என்பதை காண்பீர்கள். அந்த விசுவாசம் தேவன் உன்னோடு இருக்கிறார் என்பதை உனக்கு உறுதிப்படுத்தும், சாத்தானுக்கு எதிர்த்து நிற்க பெலன் கொடுக்கும். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம், அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம், அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.(உபா 33:27). உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார், ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள், ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். (உபா 28:7). ஆம் நீங்கள் விசுவாசத்தோடு அவனுக்கு எதிர்தது நில்லுங்கள் கர்த்தர் உங்களோடு இருந்து ஜெயத்தை கட்டளையிடுவார்.


கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள், தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள், மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். – எரேமியா 20:11.

No comments:

Post a Comment