

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை, இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது - ஏசாயா 40:28
உங்களை சிருஷ்டித்த தேவன் சோர்ந்து போவதில்லை. நம்முடைய அனுதின வாழ்க்கையில் நாம் அடிக்கடி சோர்ந்து போகிறோம். உங்களுக்கு பிரச்சனைகள் வரும் போது சோர்ந்து போய் காணப்படுகிறீர்கள். உங்களுக்கு பணத்தேவைகள் வரும் போது சோர்ந்து போகிறீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்காத போது சோர்ந்து போகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் சோர்ந்து போகும் போது உங்கள் ஆவிக்குரிய வாழ்கையிலும் வீழ்ச்சியை சந்திக்கிறீர்கள். எலியா ஒரு பெரிய தீர்க்கதரிசி. தேவனுக்கு முன்பாக தன்னை உத்தமனாக நிறுத்தின மனுஷன். கர்த்தரே தேவன் என்று நிருபித்து காட்டினவர். ஆனால் எலியா யேசபேலின் வார்த்தையை கேட்டு சோர்ந்து போனான். அந்த சோர்வு இனி இந்த பூமியில் வாழகூடாது என்று சொல்லும் நிலையில் கொண்டு வந்தது. அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும், நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான். (1இரா 19:4-5). பிரியமானவர்களே! சாத்தானின் தந்திரமான ஆயுதங்களில் ஒன்று உங்களை சோர்ந்து போகச் செய்வதாகும். நீங்கள் ஆராதிக்கும் தேவன் எப்படி சோர்ந்து போவதில்லையோ அது போல நீங்களும் சேர்ந்து போவதை தேவன் விரும்பவில்லை. சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். (ஏசா 40:29). தேவனுக்கு பிரியமில்லாத கரியங்களைச் செய்துகொண்டிருக்கிறீர்களா? தேவனுக்கு கீழ்படியாமல் காணப்படுகிறீர்களா? பாவத்திலிருந்து விடுபட முடியாமல் காணப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஆவியில் சோர்வு உண்டாகும். எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது. (சங் 40:12). தேவனுடைய ஜனங்களாகிய நீங்கள் சோர்வு வந்தவுடனே தேவனுடைய சமுகத்திற்கு செல்லுங்கள். தேவன் உங்களை பெலப்படுத்துவார். ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது. (நீதி 24:10).
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.(எபி 12:5). தேவன் எப்பொழுதும் தம்முடைய பிள்ளைகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நீங்கள் தூரபோய் காணப்படுகிறீர்கள். தேவபயம் இல்லாமல் உங்களுடைய மனவிரும்பத்தின்படி செய்கிறபடியினால் அவரைவிட்டு தூர போகிறீர்கள். பரிசுத்தம் உங்களிடத்தில் காணப்படாதபடியினால் அவரைவிட்டு தூர போகிறீர்கள். உலகத்தின் ஆசையும், பண ஆசையும் உங்களை தேவனை விட்டு தூர பிரித்து விடுகிறது. தேவன் உங்களை தம்பக்கமாய் இழுத்துக்கொள்ள விரும்புகிறார். உங்களை தம் பக்கம் கொண்டுவரும்படி சோதனைகளை அனுமதிக்கிறார். தேவன் உங்களை சோதனைகள், சிட்சைகள் மூலம் கடிந்து கொள்ளும் போது நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் வாழ்க்கையில் சோதனைகளும், சிட்சைகளும் காணப்படாவிட்டால் நீங்கள் தேவனுடைய அன்பை அறிந்து கொள்ள முடியாது. தேவன் உங்களை சிட்சித்து, உங்களை கடிந்து கொள்வதினால் தேவன் உங்களை அதிகமாக நேசிக்கிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள். கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.(எபி 12:6). தேவன் உங்களை நேசித்து சிட்சிக்கிறபடியால் உங்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோ 8:28). உங்களுடைய சோதனைகளில் அவர் உங்களுக்கு உதவி செய்வார். எனவே நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.(எபி 2:18). மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார், உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.(1கொரி 10:13).
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக, நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். – கலாத்தியர் 6:9
No comments:
Post a Comment