மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் ப+மியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். – ஏசாயா 55:10-11
இந்த பூமி ஆசீர்வதிக்கப்பட தேவன் வானத்திலிருந்து மழையை அனுப்புகிறார். அந்த மழை வானத்திலிருங்து இறங்கி பூமியை நனைத்து செடிகளையும், மரங்களையும் விளையும்படி செய்கிறது. எப்படிப்பட்ட வறண்டு காணப்படுகிற நிலமாக இருந்தாலும் தேவன் மழையை அனுப்பி அதை செழிக்கச் செய்கிறார். அது போல வறண்ட நிலத்தை போல காணப்படுகிற உங்கள் வாழ்க்கையையும் செழிக்கும்படி தேவன் தன்னுடைய வார்த்தையை அனுப்புகிறார். அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார், அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத்தரும். அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள், அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.(சங் 107:35-38). வறண்ட நிலம்போல காணப்படுகிற வாழ்க்கை செழித்து துளிர்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயமாகிய நல்ல நிலத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.(மாற் 4:14). வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள், இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.(மாற் 4:20). ஒரு மனிதனை தேவன் தன்னுடைய வார்த்தையாகிய வேத வசனத்தை கொண்டே ஆசீர்வதிக்கிறார். வேத வசனம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது. அதை நாம் வாசிக்கும் போதே அது நம்முடைய நிலைமையை சரியாக காட்டுகிறது. இந்த தேவனுடைய வார்த்தை நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை காட்டுவது மாத்திரம் அல்ல, நம்முடைய வாழ்வு செழிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நமக்கு காட்டுகிறது. இயேசு கிறிஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்த நாட்களில் அவர் வாயிலிருந்து வேத வார்த்தைகள் மழையை போல மனிதர்களின் இருதயத்தில் பாய்ந்தது அதை ஏற்றுக்கொண்ட மனிதர்களில் வாழ்க்கை உடனே துளிர்த்தது, செழித்தது. நூற்றுக்கு அதிபதி அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டான் உடனே அற்புதத்தை பெற்றான். பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.(மத் 8:13). இப்பொழுதே தேவனை நோக்கி, தேவனே உம்முடைய வார்த்தை என் மேல் இறங்கட்டும், என் வேதனை நீங்கி என் வாழ்க்கையை செழி;க்கப்பண்ணும் என்று கேளுங்கள். இப்பொழுது உங்களை நோக்கி அவருடைய வார்த்தை மழையை போல புறப்பட்டுவந்து உங்கள் வாழ்வு செழிக்கும்.
தேவனின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தை ஒருபோதும் அவரிடத்திற்கு வெறுமையாக திரும்பாது. , அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.(ஏசா 55:11). நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன், நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.(ஆதி 28:15). யாக்கோபுக்கு நேராக தேவனிடத்திலிருந்து உறைந்த மழையை போல புறப்பட்டு வந்தது. இந்த வார்த்தை தேவனிடத்திற்கு வெறுமையாக திரும்பவில்லை. இந்த வார்த்தையை தேவன் யாக்கோபுக்கு கொடுத்த பின்பு, அவன் எத்தனையோ போராட்டங்களையும், எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேர்ந்தது. முதலாவது அவன் தனிமையில் வாடினான். அடுத்து தன்னுடைய மாமன் வீட்டில் அடிமையாக இருந்தான். பல பாடுகள் அவனுக்கு நேர்ந்தது. ஓவ்வொரு பாடுகளும் அவனை தேவனுடைய வார்த்தையை நினைக்கச்செய்தது, தேவனை இன்னும் அதிகமாக, அதிகமாக சார்ந்துகொள்ள செய்தது. அவன் வாழ்க்கையில் அவன் போராட்டத்தை சந்தித்திராவிட்டால் அவன் தேவனை உறுதியாக பிடித்துக்கொண்டு, விசுவாசித்து, தேவனோடு பேராடி ஜெபித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆம், உங்களுக்கு பிரச்சனைகள், போராட்டங்கள் வருகிற நேரத்தில் அவைகளை மறந்து தேவனிடத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தையை நினைத்து ஜெபிக்க தொடங்குங்கள். அப்பொழுது வேத வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறுவதை காண்பீர்கள். யாக்கோபின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தை நிறைவேறியது. யுhக்கோபு தேவனுடைய ஆசீர்வாதத்தை ருசித்து இவ்விதமாய் சொல்லுகிறார். பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.(ஆதி 32:9-10). உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தை நிறைவேறவில்லையே என்ற ஏக்கத்தோடு காணப்படுகிறீர்களா? தேவனுடைய வார்த்தை ஒருபோதும் வெறுமையாய் திரும்பாது. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.(ஆபகூக் 2:3).
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. – சங்கீதம் 105:19
No comments:
Post a Comment