பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். - லூக்கா 22:31-32
இயேசுவோடு இருந்த சீஷர்களில் பிரதானமாக கருதப்பட்டவர் பேதுரு. சீமோன் என்பது அவன் இயேசு கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பாக அழைக்கப்பட்ட பெயர். பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா பேதுருவை இயேசுவிடம் அழைத்துவந்த போது அவனுக்கு இயேசு கேபா என்று பெயரிட்டார். கேபா என்ற கிரேக்க வார்த்தைக்கு பாறை என்று அர்த்தம். அதை மொழிபெயர்த்து பேதுரு என்று அழைக்கப்படுகிறது. பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.(யோ 1:42). பேதுரு இயேசு கிறிஸ்துவை தீவிரமாய் பின்பற்றினான். கிறிஸ்துவுக்காக எதையும் செய்ய ஆயத்தமாய் இருந்தான். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.(லூக்கா 22:33). கிறிஸ்துவிற்காக எதையும் செய்ய ஆயத்தமாய் இருந்த பேதுருவைத்தான் சோதிப்பதற்காக சாத்தான் உத்தரவு கேட்டான். பழைய ஏற்பாட்டில் யோபுவை சோதிக்கும்படி சாத்தான் தேவனிடத்தில் உத்தரவு கேட்டான். கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபிவின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர், அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது, அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார், அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.(யோபு 1:8-12). பரியமானவர்களே, தேவன் உங்கள் ஒருவரையும் சோதிக்கிறவர் அல்ல. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக, தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.(யாக்கோபு 1:13-14). உங்கள் உண்மையையும் உத்தமத்தையும் உறுதிப்படுத்தும்படி சோதிக்க அனுமதி கொடுக்கிறார். எனவே தேவனுடைய அனுமதியை பெறாமல், தேவனுடைய அனுமதியில்லாமல் சாத்தான் ஒரு போதும் உங்கள் வாழ்க்கையில் சோதனையை கொண்டு வர முடியாது.
இங்கு இயேசு சாத்தான் பேதுருவை சோதிப்பான் என்பதையும், சாத்தானின் தந்திரங்களை அறியாத பேதுருவுக்காக வேண்டிக்கொள்கிறேன் என்பதையும் சொல்லுகிறார். இயேசு கிறிஸ்து எப்பொழும் உங்களுக்குகாக வேண்டுதல் செய்கிறவர், பரிந்து பேசுகிறவர். அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.(ரோமர் 8:26). என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன், ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.(1யோ 2:1). இயேசு கெத்செமெனே தோட்டத்திற்கு ஜெபிக்கும்படி பேதுருவையும் அழைத்து சென்றார். இயேசுவோடு ஜெபிப்பதற்கு பதிலாக பேதுரு ஜெபம் செய்யாமல் தூங்கி விட்டான். நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.(லூக்கா 22:46). பேதுரு சோதிக்கப்படும் போது ஜெபிப்பதற்கு பதிலாக உறங்கினான். இது அவனுடைய சோர்வை வெளிப்படுத்துகிறது. உங்கள் பிரச்சனையில் உங்களை சோர்வடைய செய்வது தான் பிசாசின் தந்திரம். இந்த சோர்வு தேவனை மறுதலிக்கச்செய்தது. ஆனால் இயேசு அவனுக்காவும் கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்தார். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.(லூக்கா 22:44). நீங்கள் ஆராதிக்கும் தேவன சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவர். ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.(எபி 2:18). சாத்தான் சுளகினால் புடைக்க உத்தரவு கேட்டுக்கொண்டு பேதுருவை சோதிக்க ஆரம்பித்தபோது, இயேசு அவனுக்காக வேண்டுதல் செய்தார். ஆகவே தான் பேதுரு ஆண்டவரை மறுதலித்தாலும், திரும்பவும் மனம் கசந்து அழுது இயேசுவிடம் திரும்பினான். அன்றைக்கு பேதுருவிற்காக வேண்டுதல் செய்த இயேசு இன்றைக்கும் உங்களுக்காக வேண்டுதல் செய்து பரிந்து பேசுகிறார். அவர் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியினால் நீங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து சாத்தானை ஜெயிப்பீர்கள்.
மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். - எபிரேயர் 7:25
No comments:
Post a Comment