இயேசு தம்மை விசுவாசித்த ய+தர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள, சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். - யோவான் 8:31-32
இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகள் பல காரியங்களில் விடுதலை கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவன் தம்முடைய பிள்ளைகளை விடுவிக்க விரும்புகிறார். இயேசு கிறிஸ்து சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். இயேசு கிறிஸ்து சொன்ன இந்த வார்த்தை உங்களுடைய வாழ்கையில் ஒரு விடுதலையை கொடுக்கிற ஆசீர்வாதமான வாக்குத்தத்தம். இந்த வாக்குத்தத்தை நீங்கள் சுதந்தரிக்க வேண்டும் என்றால் நீங்கள் சத்தியத்தை அறியவேண்டும். சத்தியம் என்றால் என்ன? தேவனுடைய வார்த்தையே சத்தியம். உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்.(யோ 17:17) சத்தியத்திற்கு விரோதமாய் கிரியை செய்கிறவன் சாத்தான். அவன் பொய்யன். நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.(யோ 8:44) சாத்தான் எப்பொழுதும் உங்களை அழிக்கும்படியே கிரியை செய்வான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிப+ரணப்படவும் வந்தேன்.(யோ 10:10) உன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் உன்னுடைய சமாதானத்தை திருடுமானால் அது தேவனால் உண்டானதல்ல. உனக்கு அழிவையும் நடஷ்டத்தையும் உருவாக்கும் எந்த காரியமும் தேவனால் உண்டானதல்ல. அவைகள் சாத்தானால் வந்தவைகள். எனவே உங்களுடைய வாழ்ககையில் சந்திக்கும் போராட்டங்கள் அனைத்தும் சாத்தான் உன்னுடைய வாழ்க்கையில் தந்திரமாய் கொண்டுவந்தவைகள். இயேசு கிறிஸ்து உன்னை விடுவிக்கவே வந்தார். இன்றைக்கு உன்னுடைய வாழ்க்கையில் ஒரு விடுதலையை தேவன் கட்டளையிடுகிறார்.
ஏன் நம்முடைய வாழ்க்கையில் விடுதலை இல்லை? நாம் சத்தியத்தில் நடக்காதபடியினால், நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திராதபடியினால் நம்முடைய வாழ்க்கையில் விடுதலை இல்லை. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?(லூக்கா 6:46) தேவனுடைய வார்த்தையின் படி நாம் செய்யாதிருக்கும் பட்சத்தில் நம்மை பிரச்சனைகள் மேற்கொள்கிறது, பாவம் மேற்கொள்கிறது, சாத்தான் நம்மை மேற்கொள்கிறான். இயேசு கிறிஸ்து அவருடைய வார்த்தையின்படி செய்கிறவர்களை கன்மலையின்மேல் வீட்டைகட்டுகிறவனுக்கு ஒப்பிடுகிறார். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை, ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.(மத் 7:24-27) பெருமழை, பெருவெள்ளம், காற்று அனைத்தும் நாம் சந்திக்கும் போராட்டங்களை குறிக்கிறது. நாம் அவருடைய வார்த்தையின்படி நடக்கும் போது, பெருமழை சொரியும், பெருவெள்ளம் வரும், பலத்த காற்றும் அடிக்கும் ஆனால் நமக்கு ஒரு சேதமும் நேரிடாது நாம் அவைகளை மேற்கொள்வோம். ஆனால் அவருடைய வார்த்தையின்படி நாம் நடக்காத பட்சத்தில் பெருமழை, பெருவெள்ளம், பலத்த காற்று இவைகள் நம்மை மேற்கொள்ளும். அப்பொழுது நாம் விடுதலையின்றி தவிக்கிரோம். இன்றைக்கு அவருடைய வார்த்தையின்படி நடக்க ஒப்புக்கொடுங்கள் இப்பொழுதே விடுதலையை பெற்றுக்கொள்வீர்கள்.
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். – ரோமர் 6:22
No comments:
Post a Comment