Monday, 26 January 2015




நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. – 1 தீமோத்தேயு 4:13

இங்கு அப்போஸ்தலராகிய பவுல் தீமோதேயுவுக்கும் எழுதும் ஒரு ஆலோசனையை பார்க்கிறோம், அது என்னவென்றால், நான் வருமளவும் வாசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.  ஆம் தேவனுடைய வார்த்தையை ஜாக்கிரதையாய் வாசிக்கும்படி சொல்லுகிறார்.  நீங்கள் வேதத்தை அதிகமாக வாசிக்கிறீர்களா?  இது ஒரு சாதாரணமான ஒரு கேள்வி தான்.  ஆனால் உங்கள் பதில் என்ன?  வேதம் வாசிப்பது என்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் முக்கியம்.  இன்றைக்கு அநேகர் நான் எப்பொழுதும் அலுவலாக இருக்கிறேன், எனக்கு வாசிக்க நேரம் இல்லை என்று சொல்லுகிறார்கள்.  சிலர் கடமைக்காக ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம், அல்லது இரண்டு அதிகாரம் என்று ஒரு கணக்கு போட்டு வாசிக்கிறார்கள்.  வேதத்தை வாசிப்பது என்பது ஏதோ ஜெப நேரத்திலும், அல்லது கணக்கு போட்டு வாசிப்பது அல்ல.  உங்கள் முழு இருதயத்தோடு எவ்வளவு நேரம் உங்களால் வாசிக்க முடிகிறதோ அவ்வளவு நேரம் வாசிப்பதாகும்.  தேவனுடைய வார்த்தையை வாசிக்கும் நீங்கள் பாக்கியவான்கள்.   இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது.(வெளி 1:3)  தேவனுடைய வார்த்தையை நீங்கள் வாசிக்கும் போது தேவனுடைய வழிநடத்துதலை நீங்கள் உணர முடியும்.  தேவனுடைய சித்தம் என்பதும், தேவன் நம்மை வழிநடத்தும் விதமும் தேவனுடைய வார்த்தையை சார்ந்தே இருக்கிறது.  இன்றைக்கு ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களை கூறிக்கொள்கிறவர்கள் வேதத்தை வாசிக்கும் பழக்கம் இல்லாதபடியினால் தேவனுடைய நடத்துதலையும், வழியையும் அறியாமல் வழி தவறி போகிறார்கள். கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.(சங் 119:65) பலர் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும் பழக்கம் இல்லாதபடியினால் துர் உபதேசத்திற்கு செவிசாய்கிறார்கள். வேதத்தை நீங்கள் ஒழுங்காக வாசிக்கும் போது சரியான சத்தியம் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும், சத்தியத்தை விட்டு ஒருநாளும் விழகி மனிதனுடைய கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்க மாட்டீர்கள்.   வேதத்தை நேசிக்கிறவர்கள் தேவனை நேசிக்கிறார்கள்.  உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன்.(சங் 119:16)  நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.(சங் 119:44)  


தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.(எபி 4:12).  தேவனுடைய வார்த்தையில் வல்லமை இருக்கிறது.  அதற்கு இணையான ஒன்று இந்த உலகத்தில் இல்லை.  தேவனுடைய வார்த்தையில் தேவனுடைய திட்டம், தேவனுடைய ஞானம், தேவனுடைய சித்தம் அடங்கியுள்ளது.  உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.(சங் 119:105)  தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது.  அது உங்களை உயிற்பிக்கும்.  அவருடைய வார்த்தையில் ஜீவனுள்ளதால் அது உங்கள் கண்கள் வழியாக, காதுகள் வழியாக, உங்கள் சிந்தனைக்கு செல்லும்போது நீங்கள் விசுவாசத்தில் கட்டப்படுவீர்கள், நீங்கள் விசுவாசத்தில் வளருவதை கண்பீர்கள்.  ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.(மத் 6:63)  இன்றைக்கு கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாய் காணப்படுவதற்கு காரணம் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை வாசிப்பதில்லை.  நீங்கள் ஒரு வாரம் முழுவதும் உலகத்தின் காரியங்களையும், உலக செய்திகளையும் கேட்கிறீர்கள், வாரத்தில் சுமார் முப்பது நிமிடம் ஆராதனையில் மட்டும் தேவனுடைய வார்த்தையை கேட்கிறீர்கள்.  எனவே உலக அறிவு உங்களிடத்தில் அதிகமாக இருக்கிறது ஆவிக்குரிய வாழ்க்கையிலும், விசுவாசத்திலும் மிகவும் குறைவுபட்டு காணப்படுகிறீர்கள்.  நீங்கள் படித்தவர்கள் தான், அலுவலகத்தில் முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் தான், பெரிய நிர்வாகத்தை நடத்துபவர்தான்,  ஆனால் உங்களால் தேவனுடைய வார்த்தையை வாசிக்க நிச்சயமாய் நேரத்தை ஒதுக்க முடியும்.  தேவனுடைய வார்த்தை என்பது உங்களுடைய ஆவிக்குரிய உணவு அல்லது விசுவாச உணவு என்பதை நினைவுகொள்ளுங்கள்.  சமயம் கிடைக்கும் போதெல்லாம் வேதத்தை வாசியுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை காண்பீர்கள். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.(சங் 119:97)

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். – சங்கீதம் 119:92

No comments:

Post a Comment